Labels

Navigation

திருமணம்


நீ இன்னார் மகனாயிருக்க நான் இன்னார் மகளாயிருக்க வாழ்த்த வந்த உறவுமிருக்க உனக்கு சொந்தமானேன் திகதியொன்றிலே
என் சகோதரன் கொடுத்த பரீட்சைக் கட்டணமோ தந்தை கொடுத்த சுற்றுலாப் பணமோ நீ கொடுத்த மஹர்போல மணத்திருக்கவில்லை
உன் பொறுப்பில் கைமாற்றப்பட்ட அக்கணமே நீ என் காவலனாகிவிட்ட உண்மையை உணர்ந்தேன்
உனது ஆடைகொண்டு என்னைப் போர்த்திய முதற் பொழுதில்தான் என்னைக் காதலித்தேன்
அன்போடு நீ ஊட்டிய ஒவ்வொரு கவளமும் தினமும் உன் வாசகியாக எனை ஆக்கிற்று
மரியானா ஆழியாய் நீண்டு கிடக்கும் வாழ்வுப் பாதையில்
நமக்கென புதையல்கள் காத்துக் கிடக்கின்றன
என் நம்பிக்கையில் உனது முயற்சி கருக் கொண்டபின்
நமக்கான இறையருள்கள் எங்கே ஓடிவிடும்
உன் ஆத்மாவிலிருந்து உனக்கெனப் பிரிக்கப்பட்ட மெல்லினம் நானே என் தோழமையில் நீ அமைதி பெறு
என் எல்லாமாகி விட்ட உனக்கு நான் சிரம் பணிய இறைகட்டளை ஒன்றுதானில்லை
ஆயிசாவுடன் ஓட்டத்தில் போட்டியிட்ட திரு நபிகள் தோற்று நின்றதும் பின்னர் ஜெயித்ததும் பழங்கதையாகி போகாதவரை
அவர்கள் ஒரு தொட்டியில் குளித்துப் பரிமாறிய அன்பு மீட்டப்படும் வரை
உன் நிழலில் வரையப்பட்ட என் சுதந்திரங்களை நீ மீறாதிருக்கும் வரை
நம் திருமணமும் அர்த்தப்பட்டுக் கொண்டிருக்கும்
– பர்சானா றியாஸ்

Share
Banner

Ar-Rahman Markas

Post A Comment:

0 comments: